கோலாலம்பூர், 15 மே 2026 : வியாழக்கிழமை வர்த்தக அமர்வின் முடிவில், ரிங்கிட் முக்கிய நாணயங்கள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிராகப் பெரும்பாலும் வலுப்பெற்றது, ஆனால் அமெரிக்க டாலருக்கு எதிராகச் சரிந்தது. அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற, வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சந்திப்பைத் தொடர்ந்து எழுந்த சாதகமான அறிகுறிகளுக்கு மத்தியில் இந்த செயல்பாடு பதிவு செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு, ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக நேற்றைய 3.9285/9325 என்ற நிலையில் இருந்து 3.9300/9330 ஆக பலவீனமடைந்தது.
டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் சந்திப்பின் முடிவுகள் குறித்த ஆரம்பகட்ட அறிகுறிகள் சாதகமாக இருப்பதாகவும், இரு நாடுகளும் ஊக்கமளிக்கும் முன்னேற்றங்களைக் காட்டியுள்ளதாகவும் பேங்க் முவாமலாட் மலேசியா பெர்ஹாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்ஸானிஸாம் அப்துல் ரஷீத் தெரிவித்தார்.
“அமெரிக்க மாட்டிறைச்சி ஆலைகளுக்கான அனுமதிகள் புதுப்பிக்கப்பட்டதும், முன்பை விட அமெரிக்க-சீன உறவுகள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக டிரம்ப் கூறியதும் சாதகமான குறிகாட்டிகளில் அடங்கும்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார். மறுபுறம், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் அடுத்தகட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும், குறிப்பாக இன்று இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் முடிவுகள் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதில் பிரதிபலிக்குமா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
டிரம்ப்-ஷீ சந்திப்பின் தாக்கத்தை சந்தைப் பங்கேற்பாளர்கள் தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக நிலையாக இருப்பதாக முகமது அஃப்ஸானிஸாம் மேலும் கருத்து தெரிவித்தார்.
மற்றொரு காரணி என்னவென்றால், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இக்காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் 5.3 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று மலேசியப் புள்ளியியல் துறை கணித்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், ரிங்கிட் முக்கிய நாணயங்களுக்கு எதிராக பெரும்பாலும் வலுவாக வர்த்தகமானது.
இதில், ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.4888/4916 இலிருந்து 2.4886/4907 ஆகவும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.3105/3160 இலிருந்து 5.3094/3135 ஆகவும் அதிகரிப்பும், ஆனால் யூரோவுக்கு எதிராக 4.5987/6034 இலிருந்து 4.6009/6044 ஆகக் குறைவும் அடங்கும். ரிங்கிட்டும் பிராந்திய நாணயங்களுக்கு எதிராக பெரும்பாலும் சிறப்பாகச் செயல்பட்டது.
ரிங்கிட், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.0872/0906 இலிருந்து 3.0867/0893 ஆகவும், இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக 224.7/225.1 இலிருந்து 224.1/224.4 ஆகவும் உயர்ந்ததுடன், பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 6.40/6.41 இலிருந்து 6.37/6.38 ஆகவும் அதிகரித்தது.இருப்பினும், தாய் பாத்துக்கு எதிராக, ரிங்கிட் முன்பு 12.1419/1599 ஆக இருந்த நிலையில் இருந்து 12.1506/1652 ஆக பலவீனமடைந்தது.





