கோலாலம்பூர், 15 மே 2026 : குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுவனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஜாலான் அம்பாங்கில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநரால் தம்பதியர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த ஏ. துரைசிங்கம் மற்றும் ஏ. மெனகா ஆகியோரின் குடும்பத்தினரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு மனதை உருக்கும் அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும் தற்போது தங்குமிடமின்றி எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்தார். குடும்பத்தின் மூத்த மகன் இளம் வயதிலேயே குடும்பத் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், மற்ற இரு பிள்ளைகளும் தங்கள் கல்வி மற்றும் எதிர்காலப் பயணத்தை தொடரும் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“ஒரே கணத்தில் அவர்கள் தாய், தந்தை, அன்பு மற்றும் வாழ்வதற்கான இடத்தையும் இழந்துவிட்டனர். இது சாதாரண விபத்து அல்ல; பொறுப்பற்ற ஓட்டுநரின் செயலால் நிகழ்ந்த துயரம்,” என அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அரசாங்கம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, குடிபோதையிலோ அல்லது போதைப்பொருள் தாக்கத்திலோ வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு கட்டாய சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும், மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களின் உரிமம் வாழ்நாள் முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இரவு நேரங்கள், வார இறுதிகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் சாலைத் தடுப்புகள் மற்றும் திடீர் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள், கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மதுபான விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
சிகரெட் விற்பனைக்கு உள்ள கட்டுப்பாடுகளைப் போல, மதுபான விற்பனை நேரத்தையும் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும், 24 மணி நேர மதுபான விற்பனை முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிரான தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும் யூனஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.
“குடிபோதையில் வாகனம் ஓட்டுவது வெறும் போக்குவரத்து விதிமீறல் அல்ல; அது பொதுமக்களின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல்,” என அவர் எச்சரித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், தேவையான உதவிகளை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உயிரிழந்த தம்பதியரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.







