என் தமிழ்

லெபனானில் UNIFIL நக்கூரா வெடிப்புச் சம்பவம் : மலேசியா இல்லம் சேதம்

லெபனான், 14 மே 2026 : லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை (UNIFIL) தலைமையகத்திற்கு அருகிலுள்ள நக்கூரா பகுதியில், அடையாளம் தெரியாத ட்ரோன் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் வெடிப்புச் சம்பவம் கடந்த மே 12ஆம் தேதி நிகழ்ந்ததாக மலேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம், UNIFIL தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் மலேசிய இராணுவப் பணியாளர் அதிகாரிகள் (PST) தங்கியிருக்கும் “மலேசியா இல்லம்” அருகே ஏற்பட்டதாகவும், இதனால் கட்டிடத்தின் வெளிப்புறம் மற்றும் சில பகுதிகளில் லேசான சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முன்னதாக வழங்கப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்களின்படி, சம்பவம் நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டு, அனைத்து மலேசியப் பணியாளர்களும் பதுங்குக்குழிக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததால், எந்தவித காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.

பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, வெடிப்பு சம்பவம் UNIFIL பாதுகாப்புப் பகுதியின் எல்லைக்கு அருகே சுமார் 20 மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவம் நடைபெற்ற பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, விசாரணை மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மலேசிய கூட்டுப் படைத் தலைமையகம், UNIFIL மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மலேசிய இராணுவப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Scroll to Top