கோலாலம்பூர், 14 மே 2026 : தமிழ்நாடு அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சனாதன எதிர்ப்பு கருத்துக்களுக்கு மலேசிய முருக பக்திப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பேரவையின் தலைவர் பேராசிரியர் மரு.வ. ஜெயபாலன் வெளியிட்ட அறிக்கையில், “சனாதனம் என்பது ஒரு மதம் மட்டுமல்ல; அது மனிதநேயம், அறம், ஆன்மீகம், பண்பாடு மற்றும் வாழ்வியல் மரபின் அடையாளமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய பாரம்பரிய நெறிகளை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள இந்து சமுதாய மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உரியது என்றாலும், அது பிறரின் நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக உணர்வுகளை அவமதிக்கும் அளவிற்கு செல்லக்கூடாது என்றும் பேரவை வலியுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து மதங்களையும், பண்பாடுகளையும் பரஸ்பரம் மதிக்கும் ஒற்றுமைச் சமூகமே மனிதகுலத்தின் உண்மையான பலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக, “அறம் வளரட்டும், அன்பும் ஒற்றுமையும் நிலைக்கட்டும்” என்ற செய்தியுடன் மலேசிய முருக பக்திப் பேரவை தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது.






