கோலாலம்பூர், 14 மே 2026 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட “மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்துக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மே 12ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட இந்த கருத்து, கோடிக்கணக்கான இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கைகளையும் பாரம்பரியத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக மாமன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“சனாதனம் ஒழிக” என்ற முழக்கத்துடன் வெளியிடப்பட்ட கருத்துகள் சமூக நல்லிணக்கத்திற்கும் மத நல்லுறவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் என்பது மக்களைப் பிரிக்கும் கொள்கை அல்ல; மாறாக அறம், அன்பு, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய வாழ்வியல் நெறிகளை போதிக்கும் தொன்மையான ஆன்மீக மரபாகும் என்று மாமன்றம் வலியுறுத்தியது.
மேலும், எந்த ஒரு சமயத்தையோ அதன் அடிப்படை நம்பிக்கைகளையோ அவமதிப்பது கருத்துச் சுதந்திரமாக கருதப்பட முடியாது என்றும், அரசியல் கருத்துகள் அல்லது சமூக நோக்கங்கள் மற்றவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெளிப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மதங்களும், அனைத்து மக்களின் நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும் என்றும், பொதுவாழ்வில் உள்ள தலைவர்கள் மத நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் பேச வேண்டும் என்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் வலியுறுத்தியுள்ளது.






