புத்ரஜயா, 13 மே 2026 : புத்ராஜயாவில் நடைபெற்ற SOCSO சிறந்த சேவை விருது மற்றும் விசுவாசமான சேவை விருது வழங்கும் விழாவில், மனிதவள அமைச்சின் துணை அமைச்சர் R. Ramanan ராமணன் கலந்து கொண்டு SOCSO ஊழியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சி அனைத்து SOCSO ஊழியர்களுக்கும் பெருமிதமும் பாராட்டும் நிறைந்த சூழலில் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். இது வெறும் விருது வழங்கும் நிகழ்ச்சி மட்டுமல்லாமல், மக்களின் நலனையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தங்கள் நேரம், ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பை செலுத்தும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மரியாதையின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு சிறந்த சேவை விருது பெற்ற 193 பேருக்கும், 20 மற்றும் 25 ஆண்டுகள் சேவையாற்றிய விசுவாசமான ஊழியர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் அனைவரும் SOCSO அமைப்பின் பலமாகவும், நாட்டின் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாகவும் இருப்பதாக ரமணன் கூறினார்.


மேலும், SOCSO தலைமை நிர்வாக அதிகாரியான Mohamed Azman Aziz Mohamed டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமது, SOCSO-வில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதற்காக விசுவாச சேவை விருது பெற்றதையும் அவர் சிறப்பாக பாராட்டினார்.
SOCSO அமைப்பை வலுப்படுத்தி, அதன் வரலாற்றிலேயே சிறந்த செயல்திறன்களை அடையச் செய்த அவரது தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் மிகவும் மதிப்பிற்குரியது என்றும் ராமணன் குறிப்பிட்டார்.
ஒரு அமைப்பின் வெற்றி அதன் கட்டமைப்பில் மட்டும் இல்லாமல், அதை தினமும் இயக்கும் மக்களின் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் பணிச் சிந்தனையில்தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இறுதியாக, “SOCSO இன்று ஒரு நிறுவனம் மட்டுமல்ல; அது மக்களின் நம்பிக்கை” எனக் குறிப்பிட்டு, SOCSO குடும்பத்தினருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.






