என் தமிழ்

கிராமப்புற இளைஞர் மேம்பாட்டிற்கு அரசு – தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் : மஹ்த்சிர் காலித்

நாகா, 12 மே 2026 : கெடா மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அரசு அமைப்புகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் (NGO) இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என கெடா பிராந்திய மேம்பாட்டு வாரியத்தின் (KEDA) தலைவர் டத்தோ ஸ்ரீ மஹ்த்சிர் காலித் வலியுறுத்தியுள்ளார்.

கெடா மாநில நாகாவில் உள்ள தேசிய இளைஞர் திறன் பயிற்சி நிறுவனம் (IKBN) வளாகத்தில் நடைபெற்ற 2026 தேசிய இளைஞர் தின மாவட்ட அளவிலான நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், குறிப்பாக கிராமப்புற இளைஞர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை திறன் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) துறையில் உள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார். இத்தகைய பயிற்சிகள், இளைஞர்களின் திறமைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப பரந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

படாங் தெராப் மாவட்ட இளைஞர் அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, இளைஞர்களையும் உள்ளூர் மக்களையும் ஒரே இடத்தில் ஒன்றிணைத்தது. நிகழ்வில் Fun Run Challenge, ஏரோபிக்ஸ், e-விளையாட்டுப் போட்டிகள், கரம், பாரம்பரிய வில் வித்தை, சிலம்பம், இசை நிகழ்ச்சிகள், சுகாதார பரிசோதனைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதேவேளை, “ஜுவாலான் ரஹ்மா MADANI” விற்பனை திட்டத்திற்கும் பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், KEDA மற்றும் KEDA கல்லூரி இணைந்து நடத்திய கண்காட்சியில், கிராமப்புற இளைஞர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் திறன் கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக KEDA கல்லூரியில் வழங்கப்படும் தொழில்நுட்பப் பாடத்திட்டங்கள், கிராமப்புற இளைஞர்களின் எதிர்கால வெற்றிக்கான முக்கிய தளமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி, சரியான வழிகாட்டுதலும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டால், ஒவ்வொரு இளைஞரும் தங்களது திறமையின் மூலம் வெற்றி பெற முடியும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

Photo Credit : Bernama

Scroll to Top