கோலாலம்பூர், 12 மே 2026 : தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் சி. ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு மலேசியாவின் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி வாழ்த்து தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுதின் ஹசன் 11/05/2026 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயின் வெற்றி மக்கள் மாற்றத்திற்கும் சமூக நீதிக்கும் வழங்கிய ஆதரவின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சீர்திருத்த நோக்கு, சமூக நல்லிணக்கம், இளைஞர் அதிகாரமளிப்பு, நவீனமயமாக்கல் மற்றும் பாகுபாடு சார்ந்த அரசியலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையே இந்த வெற்றிக்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.
திரையுலகில் “தளபதி விஜய்” என அறியப்படும் விஜய், மலேசியாவில் குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்களிடையே பெரும் வரவேற்பும் மரியாதையும் பெற்றவர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது கலை சாதனைகள், மனிதநேய பண்புகள் மற்றும் பொதுத்தலைமைத் திறன் ஆகியவை மலேசிய மக்களிடையே நல்ல மதிப்பை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் மலேசிய இந்திய சமூகத்திற்கிடையேயான நீண்டகால வரலாற்று, கலாச்சார மற்றும் மொழி தொடர்புகளின் காரணமாக விஜயின் அரசியல் பயணம் மலேசிய மக்களாலும் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருவதாகவும் டக்கியுடின் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, தமிழகத்தை மேலும் முன்னேற்றம், நிலைத்தன்மை மற்றும் வளமை நோக்கி வழிநடத்த விஜய்க்கு பெரிக்காத்தான் நேஷனல் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.





