தாப்பா, 10 ஆகஸ்ட் 2026 : MyFamily இயக்கத்தின் 15-வது ஆண்டு விழா மற்றும் பல்வேறு சமூக நல முன்னெடுப்புகளின் தொடக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினார். குடும்ப உறவுகள் மற்றும் பணியிடச் சூழலில் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உளவியல் சவால்களை எதிர்கொள்ளும் இன்றைய சூழலில், குடும்பங்களின் நலனையும் மனநலத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், பல்வேறு உளவியல் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கும் மையத்தை உருவாக்கும் MyFamily இயக்கத்தின் முயற்சியை அவர் வரவேற்றார். மேலும், இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் திருமணத்திற்கு முந்தைய பயிற்சியும் முக்கியமானதாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வலுவான குடும்ப உறவுகள் அமைதியான மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும் என்றார்.
“ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் அதன் குடும்பங்களின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் உள்ளது” என்பதை வலியுறுத்திய டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், மனநலத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுப்பதன் மூலம் வலுவான சமூகத்தை உருவாக்க அனைவரும் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.






