என் தமிழ்

உலக செவிலியர் தினம்: செவிலியர்களின் அர்ப்பணிப்புக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டு

கோலாலம்பூர், 12 மே 2026 : உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செவிலியர்களின் தன்னலமற்ற சேவைக்கும் அர்ப்பணிப்பிற்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சிறப்பு வாழ்த்து செய்தியில், “நாம் இந்த உலகில் பிறக்கும் தருணத்திலிருந்தே முதலில் நம்மை வரவேற்று கவனிப்பவர்கள் செவிலியர்களே. தாயின் பிரசவ வேதனையின் போது அருகில் இருப்பதிலிருந்து, நமது முதல் அழுகையை கேட்பதுவரை, நோயால் அவதிப்படும் நேரங்களில் பராமரிப்பதிலும், வாழ்வின் இறுதி தருணம் வரை அன்புடன் சேவை செய்வதிலும் அவர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் செவிலியர்களின் கருணைமிக்க சேவையை அனுபவித்திருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோயால் துன்பப்படும் நோயாளிகளை ஆறுதல் கூறுதல், அச்சத்தில் இருக்கும் சிறுவர்களை சமாதானப்படுத்துதல், பதற்றத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு நம்பிக்கை அளித்தல் போன்ற பணிகளில் செவிலியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

அத்துடன், மருத்துவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க உதவும் அனுபவமும் துல்லியமும் கொண்ட செவிலியர்கள், நாட்டின் சுகாதார அமைப்பின் முக்கிய தூண்களில் ஒருவராக உள்ளனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“செவிலியர் தொழில் என்பது தியாகம், மனவலிமை மற்றும் தூய்மையான உள்ளம் ஆகியவற்றை கோரும் உயரிய சேவை. அவர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மக்களுக்கும் நாட்டிற்கும் பெரும் மதிப்புடையது,” என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “உங்களின் அனைத்து சேவைகளுக்கும் தியாகங்களுக்கும் நன்றி. உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்,” என அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Scroll to Top