கோலாலம்பூர், 12 மே 2026 : தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான ஜோசப் விஜய் அவர்களுக்கு மாண்புமிகு மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “என் நண்பர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள், திரைப்படங்களில் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு வில்லன்களை மூன்று மணி நேரத்திற்குள் தோற்கடிக்கும் அவரின் கதாபாத்திரங்களை ரசித்து வந்துள்ளனர். ஆனால் இப்போது, திரையில் அவர் ஏற்ற எந்தக் கதாபாத்திரத்தையும் விட மிகப்பெரிய பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஜய் முன்னெடுத்த “ஒரு விரல் புரட்சி” வரலாற்றை உருவாக்கும் தருவாயில் இருப்பதாகவும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மலேசியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பல தலைமுறைகளைத் தாண்டிய வரலாற்று, கலாச்சார மற்றும் மக்களிடையேயான நெருக்கமான உறவுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், புதிய முதலமைச்சர் விஜயுடன் எதிர்காலத்தில் நெருக்கமாக இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மலேசிய பிரதமரின் இந்த வாழ்த்து செய்தி, தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களிலும் விஜய் ஆதரவாளர்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





