புளோரிடா, 11 மே 2026 : ஈரானுக்கு எதிரான கடற்படை நடவடிக்கைகளை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் 61 வணிகக் கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக 4 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டாத நிலையில் நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.





