கோலாலம்பூர், 09 மே 2026 : மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் இன்று நடைபெற்ற “கெஸ்டாசிஸ் 2026” (KESTASIS) 12வது பதிப்பு விளையாட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள கெம் சுங்கை பெசி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், சபா மற்றும் சரவாக் உட்பட நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,000 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு வெறும் விளையாட்டு போட்டியாக மட்டுமல்லாமல், பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்களில் பணியாற்றும் ஊழியர்களை ஒரே ஒற்றுமை உணர்வின் கீழ் இணைக்கும் தளமாக அமைந்துள்ளதாக அமைச்சர் ரமணன் இராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
“நாம் வெவ்வேறு துறைகளிலும் மாநிலங்களிலும் இருந்து வந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, மரியாதை செலுத்தி, இணைந்து முன்னேறும் மனப்பான்மையே இன்றைய நிகழ்வின் உண்மையான பலம்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தப்பட்டு, அனைத்து அரசுத் துறைகளின் விரிவான பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கெஸ்டாசிஸ் 2026 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த பாடுபட்ட மலேசிய தொழிற்சங்க விவகாரங்கள் துறை, தீபகற்ப மலேசிய மனிதவளத் துறை மற்றும் மலேசிய தொழில்துறை உறவுகள் துறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாட்டுக் குழுவினருக்கும் அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதேவேளை, தனது வளாகத்தில் போட்டியை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் நிர்வாகத்திற்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார். “ஒரே அணியாக உழைப்போம்; ஒரே குடும்பமாக வெல்வோம்” என்ற கோஷத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வு, அரசுத் துறையினரிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.










