கோலாலம்பூர், 07 மே 2026 : தலைநகரில் ஹவானா 2026 ஊடகக் கருத்தரங்கை, தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சரான தியோ நீ சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மூலோபாயத் தகவல் தொடர்பு மற்றும் படைப்பாக்கத் தொழில்கள் பிரிவின் துணைச் செயலாளர் நாயகம் நிக் கமருசமான் நிக் ஹுசின் கலந்துகொண்டார்.
மேலும், மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவர் டத்தோ செரி வோங் சுன் வாய் மற்றும் பெர்னாமா தலைமைச் செயல் அதிகாரி டத்தின் படுக்கா நூர்-உல் அஃபிடா கமலுதீன் ஆகியோரும் பங்கேற்றனர்.
பெர்னாமா ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கில், 200-க்கும் மேற்பட்ட ஊடக வல்லுநர்கள், கல்வியாளர்கள், மக்கள் தொடர்புத் துறை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு, தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் யுகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக ஊடகத் துறை எதிர்கொள்ளும் நிலைத்தன்மை சவால்கள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அத்துடன், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஊடக அமைப்புகளின் தலைவர்கள், மலேசியாவில் செயல்படும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் ஒன்றுகூடியிருந்தனர். வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய பத்திரிகையாளர் தினமான ஹவானா 2026 கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஊடகக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






