புத்ரஜெயா, 07 மே 2026 : உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம், சாலைப் போக்குவரத்துத் துறையின் MySikap அமைப்பும், MySubsidi KPDN அமைப்பும் ஒருங்கிணைவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சில வணிக வாகனங்களுக்கு எரிபொருள் மானிய ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினை, ஏப்ரல் 1 முதல் 28 வரை புதிய வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றம் செய்த fleet card SKDS மற்றும் SKPS பயனாளர்களை பாதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், மே 1 முதல் அவர்களுக்கான மானிய எரிபொருள் ஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அமைச்சகம் விளக்கியுள்ளது.
இது தொடர்பாக, தரவு புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட fleet card SKDS மற்றும் SKPS பயனாளர்கள், நிறுவனத்தின் பெயர், SSM பதிவு எண், வாகன பதிவு எண் மற்றும் புதிய பதிவு அல்லது உரிமை மாற்றத் தேதி உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தகவல்கள் குறிப்பிட்ட இணையப் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான கடைசி நாள் மே 8 மாலை 5 மணி என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கான எரிபொருள் மானிய ஒதுக்கீடு மே 9 முதல் 11ஆம் தேதிக்குள் மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மானிய விநியோக செயல்முறை சீராக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான புகார்கள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு SKPS அழைப்பு மையம் மற்றும் MySubsidi தளத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





