பினாங்கு, 29 ஏப்ரல் 2026 : சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, ஆகம முறையில் பால் குடம் ஏந்தி முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் ‘தர்ம வேல் 2026’ சமய நிகழ்வு பினாங்கில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ளது.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் (பினாங்கு) மற்றும் பினாங்கு இந்து அறநிலைய வாரியம் இணைந்து நடத்தும் இந்த ஆன்மிக நிகழ்வு, சித்ரா பெளர்ணமி திருவிழாவை மங்களகரமான சமய நிகழ்வாக நிலைநிறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மே 1ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை, வாட்டர்ஃபால் சாலையில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் பின்புற வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறும்.
ஆகம முறைகளின்படி பால் குடம் ஏந்தி முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கும் இந்த நிகழ்வில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆன்மிக அருளைப் பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பினாங்கின் முக்கிய இந்து சமய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் சித்ரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தர்ம வேல் 2026, பக்தி, ஒழுங்கு மற்றும் ஆன்மிக ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! தர்ம வேல் துணை!” என்ற முழக்கத்துடன் பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





