புத்ராஜெயா, 29 ஏப்ரம் 2026 : மேற்கு ஆசிய மோதலால் உருவாகியுள்ள உலகளாவிய பொருளாதார அழுத்தங்களை சமாளிக்க மலேசிய அரசு விரிவான தலையீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மனித வளத்துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தலைமையில் 28/04/2026 நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு (MTEN) கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய விநியோகச் சங்கிலி சிக்கல்கள், உயர்ந்து வரும் மூலப்பொருள் விலைகள் மற்றும் அதன் தாக்கம் மக்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்படுத்தும் சவால்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிலைப்படுத்துவதோடு, அவற்றின் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தவும், திடீர் விலை உயர்வுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் மதானி அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயல்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையுடன், தொழில்துறையுடன் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தி, களத்தில் விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் ஆற்றல் மற்றும் முக்கிய உள்ளீடுகளின் விநியோகத்தை நிலைப்படுத்துதல், வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி தடையின்றி தொடர்வதை உறுதி செய்தல், வேலைவாய்ப்புகளையும் குடும்ப வருமானத்தையும் பாதுகாத்தல் உள்ளிட்ட அம்சங்கள் முக்கிய கவனமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், குறுகியகால தலையீடுகளுடன் நீண்டகால பொருளாதார மீள்திறனையும் அரசாங்கம் வலுப்படுத்தி வருவதாக ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களைக் கடந்து செல்ல மலேசியாவுக்கு வலுவான பொருளாதார அடித்தளம் உள்ளதுடன், அந்த வலிமையை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளாக மாற்றி மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.





