என் தமிழ்

நெகிரி செம்பிலானில் ஆட்சி மாற்ற முயற்சிக்கு டிஏபி எதிர்ப்பு

சிரம்பான், 27 ஏப்ரல் 2026 : நெகிரி செம்பிலானில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு ஜனநாயக செயல் கட்சி (டிஏபி), அரசமைப்பு மன்னராட்சி முறையையும் மாநில அரசின் நிலைத்தன்மையையும் தொடர்ந்து ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளரும் நெகிரி செம்பிலான் டிஏபி தலைவருமான லோக் ஸியூ ஃபூக் வெளியிட்ட அறிக்கையில், கூட்டாட்சி அரசியலமைப்பிலும் நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள அரசமைப்பு மன்னராட்சி கொள்கையை டிஏபி எப்போதும் மதித்து பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலானின் தனித்துவமான ஆதத் பெபாத்தி மரபும், யாங் டி-பெர்துவான் பெசாரை நியமிக்கும் மற்றும் பதவி நீக்கும் அதிகாரம் கொண்ட உண்டாங் யாங் எம்பாட் அமைப்பின் மரபும் மதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

அதேவேளை, யாங் டி-பெர்துவான் பெசாரை பதவியிலிருந்து நீக்கும் எந்த நடவடிக்கையும் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டே அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத் தலைவரின் இறையாண்மையும் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், அவரை இழிவுபடுத்தும் அல்லது அவமானப்படுத்தும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் டிஏபி தெரிவித்துள்ளது.

இதனுடன், நெகிரி செம்பிலானில் உள்ள தனது 11 சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹரூனுக்கு தொடர்ந்த ஆதரவை வழங்குவார்கள் என்றும், அவர் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்பதில் கட்சி உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2023 மாநிலத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதித்து தற்போதைய மாநில அரசுக்கு முழு ஆதரவு தொடரும் என்றும், கூரை துளை அரசு அமைக்கும் எந்த முயற்சியையும் டிஏபி நிராகரிக்கும் என்றும் லோக் ஸியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசின் கொள்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழக்கம்போல தொடரும் என்றும், டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவையில் இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top