ஷா ஆலம், 26 ஏப்ரல் 2026 : சிலாங்கூர் அரச குடும்பத்தை இழிவுபடுத்தும் அல்லது தூண்டுதல் ஏற்படுத்தும் எந்தவித நடவடிக்கைகளும் சமூக ஒற்றுமை மற்றும் மாநிலத்தின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என சிலாங்கூர் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பரைடு வெரமன் எச்சரித்துள்ளார்.
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அரச குடும்ப நிறுவனம் ஒற்றுமையின் அடையாளமாகவும் மாநிலத்தின் பாதுகாப்பு குடையாகவும் திகழ்வதாக குறிப்பிட்ட அவர், அதன் கண்ணியமும் மரியாதையும் அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டியது கடமையென வலியுறுத்தினார்.
சிலாங்கூர் சுல்தானின் உயரிய நிலையுடன் தொடர்புபடுத்தி அவதூறு, தூண்டுதல் அல்லது இழிவுபடுத்தும் உள்ளடக்கங்களை பரப்புவது பொறுப்பற்ற செயல் என்றும், அது மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் பொதுமக்களும் சமூகத் தலைவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், உண்மையற்ற அல்லது தூண்டுதல் தன்மையுள்ள தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் சட்ட மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சிலாங்கூர் தொடர்ந்து அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புடன் திகழ நாம் அனைவரும் ஒற்றுமையை பேண வேண்டும்,” என அவர் அழைப்பு விடுத்தார்.
சமூக நல்லிணக்கத்தையும் அரச குடும்ப மரியாதையையும் காக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.





