கோலாலம்பூர், 26 ஏப்ரல் 2026 : தேசிய ம.இ.கா தலைமையக நேதாஜி மண்டபத்தில் சாரி 2026 சேலை முன்மடிப்பு பயிற்சி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பெண்கள் திறன் மேம்பாட்டு பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 பெண்கள் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்து பட்டயங்களை பெற்றனர்.
பெண்களின் தொழில் திறன் மேம்பாட்டையும் சுயதொழில் வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி திட்டம், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய ம.இ.கா மகளிர் தலைவரும் கெமலா சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி கலந்து கொண்டு பட்டயங்களை வழங்கினார். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு திறன் பயிற்சிகள் முக்கியமானவை என்றும், இதுபோன்ற முயற்சிகள் பெண்களை தன்னம்பிக்கையுடனும் தொழில்முனைவு மனப்பாங்குடனும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
சேலை முன்மடிப்பு போன்ற சிறப்பு திறன்கள் பெண்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பாரம்பரியத்தையும் தொழில்மயமாக்கும் முயற்சியாக அமைகிறது எனவும் அவர் தெரிவித்தார்.இந்த பட்டமளிப்பு விழா, பெண்களின் திறன் வளர்ச்சி மற்றும் அதிகாரமளிப்பை முன்னிறுத்தும் அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது.









