மலேசியா, 13 ஏப்ரல் 2026 : கோபிந்த் சிங் டியோ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய மக்களுக்கும் குறிப்பாக தமிழ் சமூகத்திற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தத் தமிழ் புத்தாண்டு, கடந்த சாதனைகளைப் பரிசீலித்து, வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் ஒரு முக்கியமான தருணம் என அவர் குறிப்பிட்டார்.
இலக்கவியல் அமைச்சின் மூலம், எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து மலேசியர்களும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பங்கெடுக்கச் செய்வதே தங்களின் நோக்கம் என்றும், டிஜிட்டல் புதுமைகள் சமூக வளர்ச்சிக்கும் தேசிய முன்னேற்றத்துக்கும் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய சூழலில் நிலவும் சிக்கல்கள், குறிப்பாக மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் உருவான எரிசக்தி நெருக்கடி, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சவால்களை சமாளிக்க மடானி அரசாங்கம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சமூக நல்லிணக்கமே நாட்டின் மிகப்பெரிய வலிமை எனக் கூறிய அவர், இன, மத வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
சித்திரைப் புத்தாண்டு புதிய தொடக்கத்தை குறிக்கும் இந்த நேரத்தில், ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை, சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கும் வைசாகி மற்றும் விஷு பண்டிகை நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.





