கோலாலம்பூர், 04 ஏப்ரல் 2026 : இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டு தலங்களாக இல்லாமல், வரலாறு மற்றும் அடையாளத்தைச் சுமக்கும் புனிதச் சின்னங்களாக விளங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ‘இறைபக்தியில் கட்டடக்கலை: இந்திய வம்சாவளியினரின் கோவில்கள்’ என்ற சிறப்பு கண்காட்சி கோலாலம்பூரில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வை இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்தக் கண்காட்சி, புலம்பெயர் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களின் கட்டடக் கலை சிறப்புகளையும், அவற்றின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. தென்னிந்திய மரபுகளின் தாக்கத்துடன் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் முதல், வடஇந்திய பாணியில் வடிவமைக்கப்பட்ட நுணுக்கமான சிற்பங்கள் வரை, பல்வேறு கலை வடிவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
நவீன நகர வளர்ச்சிகளின் நடுவிலும், இந்த கோவில்கள் தங்களது பாரம்பரிய அடையாளத்தை இழக்காமல், காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்து நிற்கின்றன என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். அவை கடந்த காலத்தின் சின்னங்களாக மட்டும் இல்லாமல், கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையிலான தொடர்ச்சியான பண்பாட்டு உரையாடலாகவும் விளங்குகின்றன என்றார்.
மேலும், லண்டன், பாங்காக், கோலாலம்பூர் உள்ளிட்ட உலக நகரங்களில் உள்ள இந்து கோவில்கள், மதச் செயல்பாடுகளுக்கான மையங்களாக மட்டுமல்லாமல், புலம்பெயர் சமூகங்களின் கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்தும் முக்கியத் தளங்களாக மாறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சமாக, மலேசிய இந்தியர்களுடன் சேர்ந்து மலாய் மற்றும் சீன இனத்தைச் சேர்ந்த கலைஞர்களும் ஓவியங்களை உருவாக்கியுள்ளனர். இது கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி, 27 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. நவீன உலகில் பாரம்பரியத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதை நமது வாழ்வில் இணைத்து வளர்த்துக் கொள்வதே முக்கியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இத்தகைய புனிதக் கட்டிடங்களைப் பாதுகாத்து, அதன் அர்த்தத்தையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இந்நிகழ்வின் முக்கிய செய்தியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.









