என் தமிழ்

இந்தியாவில் அதிக வரிவிதிப்பு – அமெரிக்கா சுட்டிக்காட்டு

வாஷிங்டன், 02 ஏப்ரல் 2026 : உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில், இந்தியாவில் இறக்குமதி வரி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவில் உயர்ந்த அளவில் இறக்குமதி வரிகள் மற்றும் பல்வேறு வர்த்தக தடைகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, வேளாண் பொருட்களுக்கு சராசரி வரி சுமார் 113.1 சதவீதமாக இருப்பதாகவும், சில பொருட்களுக்கு இது மேலும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கு 150% வரை, காபி மற்றும் உலர் திராட்சைக்கு 100% வரை, ஆப்பிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 50% வரை வரி விதிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் அதிக வரி மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் இருப்பது சர்வதேச வர்த்தகத்திற்கு சவாலாக உள்ளது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளில் முக்கிய விவாதமாக மாறக்கூடும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Scroll to Top