சிலாங்கூர், 28 மார்ச் 2026 : சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மற்றும் மயானங்கள் மேம்பாட்டுக் குழுவின் (LIMAS) இணைத் தலைவருமான வீ. பாப்பாராய்டு, அண்மையில் பேசப்பட்டு வரும் சீபீல் (Seafield) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரம் குறித்து முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளார்.
இவ்வாலயத்தைச் சுற்றியிருந்த பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்வின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், இந்த விவகாரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது சுமூகமாக நடைபெற்று வரும் தீர்வு நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில், மூன்றாம் தரப்பினரோ அல்லது பொதுமக்களோ ஊகங்கள் அல்லது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுவோருக்கு விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும், இருப்பினும் இறுதி முடிவு சிலாங்கூர் மாநில அரசால் எடுக்கப்படும் கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிலப்பகுதி சட்டப்பூர்வமாக ஆலய நோக்கத்திற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்திய அவர், இதற்கு முரணான வதந்திகளை பரப்பாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.





