என் தமிழ்

ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் தகுதி விதிகள் கடுமை

லோசான், 27 மார்ச் 2026 : மரபணுப் பரிசோதனைகள் மூலம் உயிரியல் நிலை உறுதிசெய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவு நிகழ்வுகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். பல பெரும் சர்ச்சைகளைத் தூண்டிய முரண்பாடான விதிகளைப் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பின்னர், பெண் விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) இந்தப் புதிய கொள்கையை அறிவித்துள்ளது.

போட்டிகளில் மகளிர் பிரிவு நிகழ்வுகளுக்குத் தகுதிபெற அல்லது பங்கேற்க விரும்பும் அனைத்து விளையாட்டு வீராங்கனைகளும், தங்களின் தகுதியை உறுதி செய்வதற்காக SRY மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) அறிவித்துள்ளது.

“அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், SRY மரபணுவின் இருப்பு வாழ்நாள் முழுவதும் நிரந்தரமானது என்றும், இது மிகவும் துல்லியமான சான்று என்றும் ஐஓசி நம்புகிறது,” என அந்த அமைப்பின் அறிக்கை தெரிவித்தது.

முன்னதாக, ஒலிம்பிக்கில் திருநங்கை விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு எந்த விதிகளையும் வகுக்கவில்லை, மாறாக 2021-ல் சர்வதேச கூட்டமைப்புகளைத் தங்களின் சொந்த வழிகாட்டுதல்களை வகுக்குமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், புதிய ஐஓசி தலைவரான கிர்ஸ்டி கோவென்ட்ரி, ஒரு சீரான அணுகுமுறையை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்குத் தனது அமைப்பு தலைமை தாங்கும் என்று கூறி, அந்த அணுகுமுறையை மாற்றினார்.

ஒலிம்பிக் போட்டிகளில், மிகச் சிறிய வித்தியாசங்களே வெற்றியையோ தோல்வியையோ தீர்மானித்துவிடும்.

“எனவே, உயிரியல் ரீதியாக ஆண்கள் பெண்கள் பிரிவில் போட்டியிடுவது நியாயமற்றது என்பது தெளிவாகிறது. மேலும், சில விளையாட்டுகளில் இது பாதுகாப்பானதாகவும் இல்லை,” என்று அவர் கூறினார். புதிய விதிகள் முன்தேதியிட்டுச் செயல்படுத்தப்படாது, மேலும் அவை அடிமட்ட அல்லது அமெச்சூர் விளையாட்டுகளைப் பாதிக்காது.

முன்னதாக, திருநங்கை விளையாட்டு வீரர்கள் தத்தமது கூட்டமைப்புகளின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

வெளிப்படையாகத் தங்களை திருநங்கைகள் என்று அறிவித்துக்கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒரு சிலரே இதுவரை இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில், தனது பிறப்புப் பாலினத்திலிருந்து வேறுபட்ட பாலினப் பிரிவில் போட்டியிட்ட முதல் திருநங்கை வீராங்கனை என்ற பெருமையை நியூசிலாந்து பளுதூக்கும் வீராங்கனை லாரல் ஹப்பார்ட் பெற்றுள்ளார்.

Scroll to Top