புதுடெல்லி, 24 மார்ச் 2026 : ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பணம் திரும்பப் பெறும் நடைமுறையில் மாற்றங்களை இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, உறுதிசெய்யப்பட்ட (கான்ஃபர்ம்) டிக்கெட்டை ரெயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால், குறைந்தபட்ச ரத்து கட்டணம் மட்டும் பிடித்தம் செய்யப்படும். இதனால் பயணிகள் அதிகபட்ச தொகையை மீண்டும் பெற முடியும்.
72 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால், கட்டணத்தில் 25% பிடித்தம் செய்யப்படும். 24 மணி முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ஆனால், 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ரத்து செய்தால், எந்த தொகையும் திருப்பி வழங்கப்படாது.
இந்த மாற்றங்களின் மூலம் காலியாக இருக்கும் இருக்கைகளை குறைத்து, அவற்றை மற்ற பயணிகளுக்கு வழங்கும் வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை பதிவு செய்தால், சேவை செயல்திறன் மேம்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புவரை பயணிகள் தங்களது ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல நிலையங்கள் உள்ள நகரங்களில் இது பயணிகளுக்கு கூடுதல் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





