புதுடெல்லி, 23 மார்ச் 2026 : மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில், நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பாரசீக வளைகுடாவில் இருந்து இந்தியக் கொடியுடன் இயங்கும் இரண்டு எல்.பி.ஜி. சரக்கு கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி நோக்கி பயணம் செய்து வருகின்றன. ‘பைன் கியாஸ்’ மற்றும் ‘ஜெக வசந்த்’ எனும் இந்த கப்பல்கள், எல்.பி.ஜி. உற்பத்திக்கு தேவையான எரிபொருளை ஏற்றி, ஈரானின் லராக் மற்றும் காசிம் தீவுகளுக்கு இடையே பயணிக்கின்றன.
இந்த கப்பல்கள் ஜலசந்தியை கடக்கும் போது அவற்றின் அடையாளம் தெளிவாக இருப்பதால், பாதுகாப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவை ஜலசந்தியை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு, ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய எல்.பி.ஜி. கப்பல்கள் குஜராத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக சென்றடைந்தன. மேலும், ‘ஜெக லாட்கி’ கச்சா எண்ணெய் கப்பலும், ‘ஜெக பிரகாஷ்’ கேசோலின் கப்பலும் பாதுகாப்பாக பயணித்துள்ளன.
மொத்தம் 28 கப்பல்களில் இதுவரை 4 கப்பல்கள் பாதுகாப்பாக சென்றுள்ள நிலையில், மீதமுள்ள கப்பல்களில் 2 கப்பல்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு அவை பயணித்து வருகின்றன.





