என் தமிழ்

4வது டி20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

சென்னை, 22 மார்ச் 2026 : நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் மோதிய 4வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக வியான் முல்டர் மற்றும் டோனி டி சோர்சி களமிறங்கினர். ஆனால் முல்டர் ரன் எதுவும் எடுக்காமல் விரைவில் வெளியேறினார்.

அதன்பின் டோனி டி சோர்சியுடன் இணைந்த கானர் எஸ்டர்ஹுய்சென் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய டோனி டி சோர்சி 21 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் கைல் ஜெமிசன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. டிம் ராபின்சன் மட்டும் 32 ரன்கள் எடுத்து சற்றே எதிர்த்து விளையாடினார்.

மற்ற வீரர்கள் தொடர்ந்து அவுட்டாகியதால், நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணியில் கோயட்ஸி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த வெற்றியால், 5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 2-2 என சமநிலைக்கு வந்துள்ளது.

Scroll to Top