ரியாத், 22 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான பதிலடியாக ஈரான் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதல் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், ஈரானின் நடவடிக்கைக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதல் சர்வதேச விதிகளை வெளிப்படையாக மீறுவதாகவும், அண்டை நாடுகளின் பாதுகாப்பை பாதிப்பதாகவும் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாமிய மதத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், சகோதரத்துவ உணர்வுக்கும் முரணானவை என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஈரானை சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரி மற்றும் நான்கு தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களை ‘வேண்டப்படாத நபர்கள்’ என சவுதி அரசு அறிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் என சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது.





