என் தமிழ்

கரக் சிவன் கோவில் விவகாரம்: மாநில வனத்துறையுடன் ஆலோசனை – பக்தர்கள் வழிபாடு தொடரலாம்

சிலாங்கூர், 11 மார்ச் 2026 : சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஓம் ஸ்ரீ ஆத்மா அருள் ஜோதி முனீஸ்வரர் ஆலயம், பொதுவாக “கரக் சிவன் கோவில்” என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் நிலை குறித்து மாநில வனத்துறையுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செலாங்கூர் மாநில வனத்துறை (Jabatan Perhutanan Negeri Selangor) அதிகாரிகளுடன் 11 மார்ச் 2026 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக ஆலய நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆலயத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்து நிர்வாகிகள் விளக்கமளித்தனர். ஜாலான் கோம்பாக் லாமா (பாதை எண் 68) அருகே அமைந்துள்ள இந்த ஆலயம் பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபடும் ஆன்மிக மையமாக இருந்து வருவதாகவும், இது வணிக நோக்கில் செயல்படாத மத வழிபாட்டு தளமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், செலாங்கூர் மாநில வனத்துறையுடன் கடந்த காலங்களில் நடந்த நிர்வாக நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் ஆவணங்களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட “Class A Permit” தொடர்பான பதிவுகள் மற்றும் அதற்கான அதிகாரப்பூர்வ ரசீதுகள் வனத்துறையால் முன்னர் வழங்கப்பட்டிருந்ததாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான ஆலயத்தின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் விரைவில் நடைபெறவுள்ள லிமாஸ் (Jawatankuasa Khas Agama Buddha, Kristian, Hindu, Sikh dan Tao Negeri Selangor) கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எந்தவொரு அமலாக்க நடவடிக்கைகளையும் தற்காலிகமாக ஒத்திவைக்க மாநில அரசிடம் ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. விவகாரம் அதிகாரப்பூர்வமாக தீர்வு காணப்படும் வரை பக்தர்கள் அமைதியாக கோவிலுக்கு வந்து வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசிய இந்து சங்கம் மற்றும் மலேசிய இந்து மாமன்றம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுக்கும் ஆலய நிர்வாகம் நன்றியை தெரிவித்துள்ளது. இந்த அமைப்புகள் இந்து கோவில்களின் பிரச்சினைகளை முன்வைத்து சமூகத்தின் கவலைகளை எடுத்துரைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

செலாங்கூர் மாநில அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பங்கை ஆலய நிர்வாகம் மதிப்பதாகவும், வன பாதுகாப்பு பகுதிகளை நிர்வகிக்கும் அவர்களின் பொறுப்பை புரிந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அனைத்து தரப்புக்கும் ஏற்ற சமநிலையான தீர்வு கிடைக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம் எனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பக்தர்கள் அமைதியாக இருந்து அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மூலம் விவகாரம் தீர்க்கப்படும் வரை காத்திருக்குமாறு ஆலய நிர்வாகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்போல தொடரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top