என் தமிழ்

சிலிண்டர் தட்டுப்பாடு: அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு

புதுடெல்லி,  10 மார்ச் 2026 : ஈரான்–இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதால், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள் மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டிய கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளுக்கே வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோக முறை குறித்து ஆய்வு செய்யவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல ஓட்டல்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. பல முன்னணி உணவகங்களில் ஒரு நாள் பயன்பாட்டிற்கு மட்டுமே எரிவாயு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக விநியோகம் சீராகாவிட்டால் கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சில டீலர்கள் உணவகங்களுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென சென்னை ஓட்டல்கள் சங்கம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக கர்நாடகாவில் இன்று ஓட்டல்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பெங்களூருவின் இந்திராநகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஐடி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு சமையல் சிலிண்டர் கையிருப்பு உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பொருட்களின் கிடைக்கும் தன்மை, விநியோகம் மற்றும் சமமான பகிர்வை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மாநில அரசுகளும் அமல்படுத்த அதிகாரம் பெற்றுள்ளன.

இதன்படி, அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் LPG உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மேலும் LPG தயாரிக்க பயன்படும் ப்ரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) போன்ற மூலப்பொருட்களை பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்படும் LPG, Indian Oil Corporation, Bharat Petroleum (BPCL), Hindustan Petroleum (HPCL) போன்ற அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைப்பது மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Scroll to Top