என் தமிழ்

ஆலயங்களைக் காக்க களம் இறங்கும் 36 அமைப்புகள்: செர்டாங் வட்டாரக் கூட்டத்தில் ம.இ.ச தேசியத் தலைவர் அதிரடிப் பேச்சு!

செர்டாங்,09 மார்ச் 2026 : மலேசிய இந்து சங்கத்தின் செர்டாங் வட்டார ஏற்பாட்டில், நாடாளுமன்ற அளவிலான இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று (8.3.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செர்டாங் பகுதியில் உள்ள ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் சிவகாசி சங்க பூசன் தங்க கணேசன் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், ம.இ.ச. சிலாங்கூர் மாநிலத் தலைவர் தொண்டர் மாமணி அசோகன் மூக்கன், மாநில ஆலயப் பிரிவுத் தலைவர் திரு. அழகேந்திரா, கல்வி மற்றும் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் திரு. சந்துரு கணேசன், செர்டாங் வட்டாரத் தலைவர் திரு. ரகு ரங்கன், முன்னாள் பிரிவுத் தலைவர் திரு. தர்மராஜ், நாடாளுமன்ற உதவியாளர் திரு. ராஜா மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற இந்தியப் பிரதிநிதி திருமதி சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் செர்டாங் வட்டாரச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 17 ஆலயங்களின் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய தேசியத் தலைவர் தங்க கணேசன், இந்து ஆலயங்கள் நமது கலாச்சாரத்தின் முக்கிய அடையாளங்களாக இருப்பதால் அவற்றை சனாதன தர்ம அடிப்படையில் முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். தோட்டப் புறங்களில் உருவாக்கப்பட்ட பல ஆலயங்கள் தற்போது நிலச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

மேலும், சமய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட மொத்தம் 36 அமைப்புகள் ஒன்றிணைந்து, அடுத்த 6 முதல் 12 மாதங்களில் ஆலயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிலச் சிக்கல் எதிர்நோக்கும் ஆலயங்கள் அரசு அலுவலகங்களை அணுகி உரிய பட்டா பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சிலாங்கூர் மாநிலத் தலைவர் அசோகன் மூக்கன், பல ஆலயங்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதாகவும், அந்தத் தயக்கத்தைத் துறந்து மலேசிய இந்து சங்கத்தை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாநில ஆலயப் பிரிவுத் தலைவர் திரு. அழகேந்திரா, தனியார் நிலங்களில் இயங்கும் ஆலயங்கள் மற்றும் நிலப் பட்டா தொடர்பான சிக்கல்களைச் சட்ட ரீதியாக எவ்வாறு கையாளலாம் என்பதைக் குறித்து விளக்கமளித்தார். மாநில மற்றும் வட்டார அளவில் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில், தேசிய அளவில் ஒரு பெரிய நிகழ்வை நடத்தி நாட்டின் பிரதமரிடம் மனு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநில கல்வி மற்றும் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் திரு. சந்துரு கணேசன் தனது உரையில், ஆலயத் தலைவர்கள் மற்றும் இந்திய இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.

Scroll to Top