டெஹ்ரான், 07 மார்ச் 2026 : அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இந்த போர் இன்று 7-வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த தாக்குதல்களில் ஈரானில் பொதுமக்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதல் தொடங்கியதிலிருந்து ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 2,114 முதல் 2,662 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், 48 உயர்மட்ட அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட சுமார் 1,000 முதல் 1,500 வரை ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே கூறுகையில், “நாங்கள் அண்டை அரபு நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை. அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் சொத்துகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.





