என் தமிழ்

30 நாட்கள் மட்டும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கலாம்: இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன், 06 மார்ச் 2026 : ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த 28-ஆம் தேதி அந்த நாட்டின் மீது திடீர் ராணுவ தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ஈரான் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தொடர்ந்து ஏவி தாக்குதல் நடத்தி வரும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்கி வருகிறது. வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்று வரும் இந்த மோதல் தற்போது ஏழாவது நாளை எட்டியுள்ளது. இரு தரப்பும் இடைவிடாமல் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு சுமார் 90 சதவீத கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து கவலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயரக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

எனினும், இந்திய நகரங்களில் எரிபொருள் விலையில் இதுவரை பெரிய மாற்றம் காணப்படவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா தனது எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்ய ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தற்காலிகமாக 30 நாட்கள் விலக்கு அளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், “ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எரிசக்தி கொள்கைகளின் காரணமாக அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறுவதற்காக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை வாங்க 30 நாட்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த நடவடிக்கை ரஷிய அரசுக்கு பெரும் நிதி பலன் அளிக்காது என்றும், கடலில் ஏற்கனவே சிக்கித் தவிக்கும் எண்ணெய் பரிவர்த்தனைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

மேலும், இந்தியா அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளி நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்க எண்ணெய் இறக்குமதியையும் அதிகரிக்கும் என தாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஈரான் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதிக்க முயற்சிப்பதால் உருவாகும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த இடைக்கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40 சதவீதத்தை வளைகுடா நாடுகளிலிருந்து பெறுகிறது. இதில் பெரும்பகுதி மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு வரப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியா தனது எரிசக்தி நிலையை தினமும் இரு முறை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், நாட்டில் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகத்தில் எந்த குறையும் இல்லை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Scroll to Top