என் தமிழ்

மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணனுக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் இறுதி அஞ்சலி

கோலாலம்பூர், 04 மார்ச் 2026 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 4-ஆவது தேசியத் தலைவராகவும், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவையின் தேசியத் தலைவராகவும், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் தேசியத் தலைவராகவும் பல்வேறு பொதுநல இயக்கங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்து சமூகப்பணியில் சிறந்து விளங்கிய மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் உலகிற்குப் பெரும் இழப்பாகும் என டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவையடுத்து நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன், அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட்டு வந்த காலம் முதலே மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களை நன்கு அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

நமது நாட்டின் தமிழ் இளைஞர்களுக்கிடையில் மொழி உணர்வையும் இனப்பற்றையும் வளர்த்த முக்கிய இயக்கமாக மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் திகழ்கிறது என்றும், அந்த இயக்கத்தின் மூலம் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் தனது சமூகப் பணியை ஆரம்பித்து அரசியல் துறையிலும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் தொடர்ந்து பங்களித்து வந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய இந்திய சமுதாயத்தில் அன்னாரின் சேவையும் புகழும் என்றும் நிலைத்திருக்கும் என்றும் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top