என் தமிழ்

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம் என அமெரிக்கா விளக்கம் அளித்தது

வாஷிங்டன்,  04 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் இன்று 5-வது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல்–அமெரிக்கா கூட்டு ராணுவம் நடத்திய கடும் தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் காமேனி, பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே, புரட்சிகர ராணுவப்படை தளபதிகள் முகமது பக்பூர், செய்யது மஜித் மவுசவி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி உள்ளிட்ட 13 உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமேனியின் இல்லத்தில் அவர்கள் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த நேரத்தை பயன்படுத்தி அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் தற்காலிக பாதுகாப்புத் துறை அமைச்சராக செய்யது மஜித் இப்னு அல்-ரெசா பதவியேற்றார். ஆனால் அவர் பதவியேற்று 24 மணி நேரத்திற்குள், தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்த தகவலை ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டில் இணைய சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கிருந்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையில், ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் கடும் தாக்குதலை மேற்கொண்டது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பல தொழிற்சாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், வானில் கரும்புகை எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு முன்பாக, தொழிற்சாலை பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், இந்த போர் நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததே தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக நடைபெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளும் முடிவின்றி முடிந்தன. குறிப்பாக, யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட முடியாது என ஈரான் தெரிவித்ததையடுத்து, அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இறுதி பேச்சுவார்த்தைக்கு சில நாட்களுக்குப் பிறகே ஆபரேஷன் எபிக் ப்யூரி என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியதாக அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top