என் தமிழ்

உலகத் தாய்மொழி நாள் 2026

12 பிப்ரவரி 2026 : உலகத் தாய்மொழி நாள் 2011-ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் அறவாரியம் (Tamil Foundation Malaysia), LLG எனப்படும் லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையத்தால் தொடங்கப்பட்டது. இது தொடக்கமாகப் பெட்டாலிங் ஜெயா நூலகத்தில் ஒரு முன்னோடி முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு அறிமுக நிகழ்ச்சியும் கூட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது. பின்னர், 2012-ஆம் ஆண்டில் பெரிய அளவில் பல இன சங்கங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு சமூக அமைப்புகள் இத்திட்டத்தில் இணையத் தொடங்கின.

இவ்வாண்டு நாம் 15-ஆவது ஆண்டாக இவ்வுலகத் தாய்மொழி நாளைக் கொண்டாடவிருக்கிறோம். 2026-ஆம் ஆண்டிற்கான உலகத் தாய்மொழி நாளின் கருப்பொருள், தாய்மொழி: நம் அனைவரின் பொது மரபும் அடையாளமும் என்பதாகும். Mother Tongue Language: Our Shared Heritage and Identity.

இவ்வாண்டு, LLG லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையத்தின் தலைமையில் மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM), மலேசியத் தமிழ் அறவாரியம் (TFM),  மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (Dong Zong), மலேசியன் நேட்டிவ் நெட்வொர்க் (JAOS), மலேசியச் சீனப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (Jiao Zong),  கோலாலம்பூர் & சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம் (KLSCAH), மெர்டேக்கா பல்கலைக்கழகம், தைவான் பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FAATUM), கடாசான்துசுன் மொழி அறவாரியம் (KLF)  ஆகிய அமைப்புகள் இணைந்து இவ்விழாவை நடத்தவுள்ளது.  

உலகத் தாய்மொழி நாளின் அறிமுக விழா எதிர்வரும் 28 பிப்ரவரி 2026 (சனிக்கிழமை) கோலாலம்பூர் & சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபத்தில் (KLSCAH) நடைபெறவுள்ளது. மேலும், கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் 9 மே 2026 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டில் நடத்தப்படும் முக்கிய நிகழ்ச்சிகள்:

28 பிப்ரவரி 2026-ஆம் நாள் நடத்தப்படும் உலகத் தாய்மொழி நாளின் அறிமுக விழாவை கல்வி அமைச்சர் மாண்புமிகு பட்லினா சிடேக் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க ஒப்புக்கொண்டார். கல்வி அமைச்சர் அவர்களின் வருகை இந்நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா பிப்ரவரி மாத நிகழ்ச்சிக்குத் தொடர்ச்சியாக 9 மே 2026 நடைபெறவிருக்கிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை எழுதும் போட்டியும் ஓவியப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

படிநிலை 1 (ஆண்டு 1 – 3) – ஓவியப் போட்டி

தலைப்பு: தாய்மொழி எனது பெருமை

படிநிலை 2 (ஆண்டு 4 – 6) – கட்டுரை எழுதும் போட்டி

தலைப்பு: தாய்மொழி, என் முதல் மொழி

போட்டிகளில் முதல் 10 நிலையில் வெற்றி பெறும் மாணவர்களுக்குக் கீழ் கண்டவாறு பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன:

முதல் நிலை                        : கோப்பை, பரிசுத் தொகை & சான்றிதழ்
இரண்டாம் நிலை : கோப்பை, பரிசுத் தொகை & சான்றிதழ்

மூன்றாம் நிலை    : கோப்பை, பரிசுத் தொகை & சான்றிதழ்

7 ஆறுதல் பரிசுகள்           : பதக்கம் & சான்றிதழ்

பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

தாய்மொழி என்பது நாகரிகம், பண்பு, நல்லொழுக்கத்தை வளர்க்கும் ஒரு வலுவான அடிப்படை ஆகும். அனைவரும் ஒன்றிணைந்து உலகத் தாய்மொழி நாளைச் சிறப்பாகக் கொண்டாடி, தாய்மொழியின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுவோம்.

Scroll to Top