என் தமிழ்

இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காண காற்பந்து போட்டி

ஜாலான் ராஜா, 17/04/2025 : காற்பந்து துறையில் இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காணும் பொருட்டு மைஸ்கில்ஸ் அறவாரியம் 17 வயதுக்கு கீழ்ப்பட்ட காற்பந்து போட்டியை ஏற்று நடத்தவுள்ளது.

ஒரு குழுவில் எழுவர் அடங்கிய நிலையில், களும்பாங் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுக் குழுக்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவிருப்பதாக, மைஸ்கில்ஸ் அறவாரிய தோற்றுநர் பசுபதி சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியாளரை மட்டும் அடையாளம் காணாமல், கலந்து கொள்ளும் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவதே இப்போட்டியின் நோக்கம் என்று பசுபதி சிதம்பரம் விளக்கினார்.

“இந்த போட்டியின் வழி மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இயலும். யார் வெற்றியாளர், யார் முதலிடம் யார் இரண்டாவது இடம் என்பதை மட்டும் பார்ப்பது இப்போட்டியின் நோக்கம் அல்ல. மாணவர்களின் திறன், நடத்தையை மேம்படுத்துவதே இதன் நோக்கம்,” என்று அவர் கூறினார்.

இது போன்ற போட்டி வாய்ப்புகளை மாணவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தேசிய காற்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ கே.ராஜகோபால் தெரிவித்தார்.

“இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்காது. இது நல்ல தளம். சிலருக்கு விளையாடுவதற்கு இடம் இல்லை. ஆனால் இங்கே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் வழி தனது திறனை மாணவர்கள் வெளிப்படுத்த இயலும்,” என்று ராஜகோபால் கூறினார்.

ஏப்ரல் 27-ஆம் தேதி, சிலாங்கூர் களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் திடல்களில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

Source : Bernama

#MySkills
#Football
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top