25 ஜூலை 2026 : ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஈரானுக்கு எந்தவிதமான ஆயுதங்களையும் வழங்கமாட்டோம் என்று தமக்கு உறுதியளித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த உறுதிமொழியை நம்புவதாகவும், அவர்கள் தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, சீனா அல்லது ரஷ்யா ஈரானுக்கு ஆயுத உதவி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது அவர்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கும் என்றும், அதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா அல்லது சீனா ராணுவ தொழில்நுட்பம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்குகிறதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியிலேயே டிரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.






