நேற்று 07/03/2017 ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, எதிர்நோக்கவிருக்கும் 14வது பொதுத்தேர்தலின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தயார்நிலை குறித்தும் பேசப்பட்டது.
முன்னதாக கூறியது போலவே ம.இ.கா போட்டியிடவிருக்கும் தொகுதிகளில் தேர்தல் இயந்திரங்கள் முடக்கி விடப்பட்டுள்ளது. இதன்வழி அந்தந்த இடங்களில் செயற்பாடு வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நானும் பல இடங்களுக்கு நேரடியாகச் சென்று செயற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றேன். குறிப்பாக, புதிய வாக்களர்கள் பதிவு, இருக்கக்கூடிய வாக்களர்களை அடையாளம் காணும் நடவடிக்கை போன்ற முயற்சிகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது.
ம.இ.காவின் தொகுதிகள் தக்கவைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
எண்ணிக்கையின் அடிப்படையில் ம.இ.கா முன்பு போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடக்கூடிய சிந்தனையில்தான் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ம.இ.கா போட்டியிடக்கூடிய தொகுதிகளில் மாற்றநிலை குறித்த பேச்சு வார்த்தைகள் ஏதும் இதுவரையில் நடத்தப்படவில்லை. அவ்வகையில், முன்பு போட்டியிட்டதைப் போல் 9 நாடாளுமன்றத்திலும் 19 சட்டமன்றம் அல்லது கடந்த தேர்தலைப் போன்று 18 சட்டமன்றத்திலும் ம.இ.கா போட்டியிடக்கூடும் சூழ்நிலையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகளையும் ம.இ.கா தொடர்ந்து மேற்கொள்ளும்.
இந்த தகவல்களை ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்தார்.