ரகானே சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது

ரகானே சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது

Ajinkya

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், அஜின்கியா ரகானே சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. ‘வேகத்தில்’ அசத்திய ஆண்டர்சன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று  துவங்கியது. இரு அணிகளும், முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

விஜய் ஏமாற்றம்:

இந்திய அணிக்கு முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆண்டர்சன் ‘வேகத்தில்’ தவான் (7) மீண்டும் ஏமாற்றினார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில், ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் முரளி விஜய் கொடுத்த ‘கேட்சை’ இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மாட் பிரையர் கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய முரளி விஜய் (24), பிளங்கட் பந்தில் அவுட்டானார்.

தோனி சொதப்பல்:

அடுத்து வந்த விராத் கோஹ்லி (25), ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் ‘வேகத்தில்’ புஜாரா (28) போல்டானார். கேப்டன் தோனி (1), ஸ்டூவர்ட் பிராட்டிடம் சிக்கினார். மொயீன் அலி ‘சுழலில்’ ரவிந்திர ஜடேஜா (3) ‘பெவிலியன்’ திரும்பினார்.

ரகானே ராஜ்யம்:

பின் இணைந்த அஜின்கியா ரகானே, புவனேஷ்வர் குமார் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்பாக ஆடிய இவர்கள், இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளிக்க, அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.  எட்டாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த போது, பிராட் ‘வேகத்தி்ல்’ புவனேஷ்வர் (36) போல்டானார். அபாரமாக ஆடிய ரகானே, ஆண்டர்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இவர், 103 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஷமி (14), இஷாந்த் சர்மா (12) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 4, பிராட் 2, பிளங்கட், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

9

அபாரமாக ஆடிய ரகானே, லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த 9வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக வினோ மன்கத் (184 ரன், 1952), வெங்சர்க்கார் (1979–103 ரன், 1982–157 ரன், 1986–126* ரன்), குண்டப்பா விஸ்வநாத் (113, 1979), ரவி சாஸ்திரி (100, 1990), அசார் (121, 1990), கங்குலி (131, 1996), அகார்கர் (109*, 2002), டிராவிட் (103*, 2011) ஆகியோர் லார்ட்சில் சதம் அடித்தனர்.

233

இந்தியாவின் முரளி விஜய் விக்கெட்டை கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதுவரை 55 டெஸ்டில் 233 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் பிரட் ட்ருமேன் (229), இயான் போத்தம் (226) உள்ளனர்.

72

லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில், சக சீனியர் வீரர் இயான் போத்தம்மை (69 விக்கெட், 15 டெஸ்ட்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஆண்டர்சன். இங்கு 16வது டெஸ்டில் விளையாடும் ஆண்டர்சன், இதுவரை 72 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

65

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள் வரிசையில், ஆண்டர்சன் முதலிடம் பிடித்தார். இந்தியாவுக்கு எதிராக 16வது டெஸ்டில் விளையாடும் இவர், இதுவரை 65 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இவரை அடுத்து அன்டர்வுட், வில்லிஸ் தலா 62 விக்கெட் சாய்த்தனர்.

250

இந்திய கேப்டன் தோனியை அவுட்டாக்கிய ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் அரங்கில் தனது 250வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 8வது இங்கிலாந்து பவுலரானார். இதுவரை இவர், 71 டெஸ்டில் 251 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இயான் போத்தம் (383 விக்கெட்), ஆண்டர்சன் (361), வில்லிஸ் (325) ஆகியோர் உள்ளனர்.