நதிகள் இணைப்புக்காக மூன்று திட்டங்கள் தேர்வு: அமைச்சர் உமா பாரதி

நதிகள் இணைப்புக்காக மூன்று திட்டங்கள் தேர்வு: அமைச்சர் உமா பாரதி

Uma

புதுடில்லி: ”நதிகள் இணைப்பு தொடர்பாக, மூன்று திட்டங்களை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. ஆனாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இந்த நதிகள் இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும்,” என, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி, நேற்று, லோக்சபாவில் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில், நம் நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கும்; மற்றொரு பகுதியில் வறட்சியும் நிலவுவது, பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. மேலும், நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, ஏராளமான தண்ணீர், கடலில் வீணாக கலக்கிறது. இந்தப் பிரச்னையை தீர்க்க, நாடு முழுவதும் தண்ணீர் பிரச்னை வராமல் தடுக்க, நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக உள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், இது தொடர்பாக சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், அதன் பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இதில் அக்கறை காட்டவில்லை. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, புதிய அரசு பதவியேற்றதும், இந்த நதிகள் இணைப்பு விவகாரம், மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், நதிகள் இணைப்பு தொடர்பாக, நேற்று லோக்சபாவில் பேசிய, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், உமா பாரதி கூறியதாவது: நதிகள் இணைப்பு தொடர்பாக, மூன்று திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கென் – பெட்வா நதிகள், தாமன்கங்கா – பிஞ்சால் நதிகள் மற்றும் பார் தாவி – நர்மதா நதிகள் இணைக்கப்படும். இந்த நதிகள் இணைப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியில், தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டது. மூன்று திட்டங்களில், கென் – பெட்வா, தாமன் கங்கா – பிஞ்சால் நதிகள் இணைப்பு தொடர்பான திட்ட அறிக்கைகள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இந்த திட்டம் மேற்கொள்ளப்படும். மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், நதிகள் இணைப்பு பணியை மேற்கொள்ள முடியாது. இந்த மூன்று நதிகள் இணைப்பால், 8.64 கோடி ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதுதவிர, குடி தண்ணீர் பிரச்னை தீரும்; மீன் வளம் அதிகரிக்கும். பல பகுதிகளில் உள்ள தண்ணீரின் உப்புத்தன்மை குறைவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதும் கட்டுப்படும்.
மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் இணைப்பு தொடர்பாக, ஒன்பது மாநிலங்களிடம் இருந்து, 45 முன்மொழிவுகள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து தற்போது, மூன்று திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நதிகள் இணைப்பு தொடர்பாக, மாநிலங்கள் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க, மத்திய நீர்வள ஆணையர் தலைமையில், பாசனத் துறை மற்றும் நீர்வளத் துறை செயலர்களை உறுப்பினர்களாக கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தேசிய தண்ணீர் மேம்பாட்டு நிறுவனம், அவ்வப்போது நடத்தும் கூட்டத்திலும், நதிகள் இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, உமா பாரதி தெரிவித்தார்.

‘தண்ணீர் பற்றாக்குறை நாடாகும்’

* நதிகள் இணைப்பு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டம். ஆனாலும், இப்போது தான் அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
* நதிகள் இணைப்பு ஆய்வுக்காக, மத்திய பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, 2009ம் ஆண்டில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘இது, ஆபத்தானது என்றும், பெரிய அளவில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என்றும் கூறினார்.
* ‘தண்ணீரால் அதிகம் பிரச்னைகளை சந்திக்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், 2025ம் ஆண்டில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடாகி விடும். எனவே, இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டும், நதிகள் இணைப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம்’ என, சமீபத்தில், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு கமிட்டியின் முன்னாள் தலைவர், சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
* கென் மற்றும் பெட்வா நதிகளில், கென் நதி உ.பி., மாநிலத்திலும், பெட்வா நதி மத்திய பிரதேசத்திலும் உற்பத்தியாகின்றன. இரண்டும், யமுனையின் துணை நதிகள்.
* தாமன் கங்கா மற்றும் பிஞ்சால் நதிகள், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலம் வழியாக ஓடுபவை. பார் தபி மற்றும் நர்மதா நதிகளும், இந்த மாநிலங்களில் ஓடுபவையே. இந்த நதிகள் இணைப்பு மூலம், இரண்டு மாநிலங்களிலும் உள்ள வறட்சியான பகுதிகள் மேம்படும். குடி தண்ணீர் பற்றாக்குறை தீரும்.

தமிழக – கேரள நதிகளை இணைக்க முதல்வர் உம்மன் சாண்டி எதிர்ப்பு

கேரள சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனின் கேள்விக்கு பதில் அளித்த, காங்., கூட்டணி அரசின் முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது: தமிழகத்தில் ஓடும் வைப்பாற்றுடன், கேரளாவின் பம்பா – அச்சன்கோவில் ஆறுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை ஒரு போதும், கேரள மாநில அரசு அனுமதிக்காது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால், மூன்று ஆறுகளும் வறண்டு போவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இந்த ஆறுகள் இணைப்பு திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை, கேரள மாநில அரசு தயாராக வைத்துள்ளது. மேலும், ‘பம்பா – அச்சன்கோவில் ஆறுகளில், உபரியாக தண்ணீர் எதுவும் இல்லை’ என, டில்லியைச் சேர்ந்த, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.
‘கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கான செயல் திட்டம் மூலம் கிடைக்கும் பலனை பொறுத்து, அந்தத் திட்டம், நாட்டில் உள்ள மற்ற பெரிய நதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்,” என, உமா பாரதி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: கங்கை நதியை சுத்தப்படுத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு அமைச்சகங்கள், கல்வியாளர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கங்கையை சுத்தப்படுத்துவதற்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்ட பின், அது தொடர்பான முக்கிய அம்சங்கள், பணியை முடிக்க ஆகும் காலம், ஏற்படும் செலவு போன்றவை தெரியவரும். கங்கை நதிக்கான செயல் திட்டம் மூலம் கிடைக்கும் பலனை பொறுத்தே, அந்த செயல்திட்டம், நாட்டில் உள்ள மற்ற நதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு, உமா பாரதி கூறினார்.
மத்திய அரசின் நதிகள் இணைப்புத் திட்டம், வங்கதேச அரசை கவலை அடையச் செய்துள்ளது. இந்திய அரசு நதிகள் இணைப்பை மேற்கொண்டால், அங்கு தங்களை பாதிக்கும் என்றும், வங்கதேச நீர்வளத் துறை அமைச்சகத்தின், பார்லிமென்ட் நிலைக் குழு தெரிவித்துள்ளது.