எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டால் இந்தியா-சீனா உலகிற்கு முன்னுதாரணமாக திகழும்: மோடி

எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டால் இந்தியா-சீனா உலகிற்கு முன்னுதாரணமாக திகழும்: மோடி

Narendra_Modi_Brics

போர்டாலிசா : இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு இருநாடுகளும் தீர்வு கண்டு விட்டால், உலக அரங்கில் அமைதி தீர்மானத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியாவும், சீனாவும் திகழும் என சீன அதிபர் ஷி ஜிபிங்கை சந்தித்து பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் துவங்கிய பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி, பிரேசில் சென்றுள்ளார். பிரேசிலின் வடகிழக்கு நகரான போர்டலிசாவிற்கு அருகே உள்ள ஹோட்டலில் தங்கி உள்ள சீன அதிபர் ஷி.,யை மோடி சந்தித்து பேசி உள்ளார். முதலில் 40 நிமிடங்கள் திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, பின்னர் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான சுமார் 4000 கி.மீ., தூர எல்லைப் பகுதியில் மீன படைகளின் ஊடுருவல் குறித்தும் விவகாரங்களும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளின் விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பிறகு, இந்தியா ஜி20 அமைப்பின் உறுப்பு நாடாக இணைந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக, உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சீனா தலைவர்களிடையேயான இந்த சந்திப்பை ஒட்டுமொத்த உலகமே கவனித்துக் கொண்டுள்ளதாக சீன அதிபர் ஷி தெரிவித்தார். சீன அதிபருடனான மோடியின் இந்த முதல் சந்திப்பின் போது, இந்த சந்திப்பு நிலையான மற்றும் சமூகமான பல பிரச்னைகளுக்கு தீர்வாக திகழும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பல பிரச்னைகள் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளிடையேயான கலாச்சார தொடர்புகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியா மற்றும் சீன மக்களிடையே பாரம்பரியங்கள் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் என மோடி தெரிவித்தார். எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இரு நாடுகளும் முன்வர வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தி உள்ளார். இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.அவ்வாறு எல்லை பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் பட்சத்தில் இரு நாடுகளுக்கு இடையே லாபகரமான நட்புறவு ஏற்படுவதுடன் அது ஆசிய மற்றும் சர்வதேச அளவில் இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். எல்லையில் பயங்கரவாதத்தை ஒடுக்கவும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனவும் எனவும் மோடி வலியுறுத்தி உள்ளார். இந்திய தொழில்துறை மற்றும் பிற உள்கட்டமைப்பு துறைகளில் சீனாவின் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாக உறுதியளித்த சீன அதிபர், நவம்பர் மாதம் மீனாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ௨௧ நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்திய-சீன தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் சையது அக்பருதீன், ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டணைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு இந்தியா அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும் எனவும், இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் செப்டம்பரில் இந்தியா வருவதற்காக மோடி விடுத்த அழைப்பையும் ஷி ஏற்றுக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அக்பருதீன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்னும் ஷி இந்தியா வரும் தேதி முடிவு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய யாத்திரீகர்களுக்கு உதவும் வகையில் கைலாஷ் மானசரோவர் பகுதியில் புதிய வழியை சீனா ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மோடி இந்த சந்திப்பின் கேட்டுக் கொண்டதாகவும் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.