மத்திய உளவுப்பிரிவு அதிகாரி மீது வழக்கு: உதயகுமார்

மத்திய உளவுப்பிரிவு அதிகாரி மீது வழக்கு:  உதயகுமார்

Udhayakumar

சென்னை ஐகோர்ட்டில், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி.) இணை இயக்குனராக எஸ்.ஏ.ரிஸ்வீ உள்ளார். இவர், கடந்த ஜூன் 3-ந் தேதி பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோருக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கூடங்குளம் அணு உலையின் பணி, அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினரின் போராட்டத்தினால் கடந்த 2011-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 

அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகம் மற்றும் மேற்கத்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய நிதியினை பெற்ற உதயகுமார், இந்த போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். மேலும், ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒருவர், உதயகுமாரை சந்தித்து இந்தியாவில் உள்ள அணு உலைகள் மற்றும் யுரேனியம் கனிமம் குவாரிகள் ஆகியவை அமைந்துள்ள இடங்களையும், இந்தியாவின் அணு உலை திட்டங்களுக்கு எதிராக போராடும் 50 பேரின் விவரங்களையும் கொடுத்துள்ளார். அப்போது மிகப்பெரிய சதி திட்டம் நடந்துள்ளது’ என்று கூறியுள்ளார். 

நாட்டின் மிகப்பெரிய பதவிகளை வகிக்கும் நபர்களுக்கு அனுப்பிய இந்த ரகசிய கடிதத்தை இணை இயக்குனர் ரிஸ்வீ, பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளார். இதன்மூலம், சமுதாயத்தில் எனக்கு உள்ள நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், மக்கள் மத்தியில் என் மீது தரம் குறைந்த எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டு அவர் செயல்பட்டுள்ளார். 

இந்த ரகசிய தகவல் செய்தியாக ஆங்கில நாளிதழ்கள் மற்றும் டி.வி. சேனல்களில் கடந்த ஜூன் 12-ந் தேதி வெளியாகியுள்ளது. மேலும், ஒரு நாட்டின் ரகசிய கடிதத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்தது எப்படி? என்பது குறித்து விசாரித்து இணை இயக்குனர் ரிஸ்வீ மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.