5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்கள்

5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்கள்

gow

உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

5 மாநில புதிய கவர்னர்களுக்கான பெயர்ப்பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி இறுதி செய்துள்ளனர். இதில் உத்தரப்பிரதேச கவர்னராக முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி ராம்நாயக் நியமிக்கப்பட உள்ளார்.

உத்தரபிரதேச பா.ஜனதா கட்சியை சேர்ந்த கேசரிநாத் திரிபாதி, டெல்லியை சேர்ந்த வி.கே.மல்கோத்ரா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த கைலாஷ் ஜோஷி, பஞ்சாப்பை சேர்ந்த பலராம்தாஸ் தாண்டன் ஆகியோரும் புதிய கவர்னர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

அவர்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு கவர்னராக நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

புதிய கவர்னர்கள் நியமனம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகே 5 பேரின் பெயர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த வார இறுதியில் அவர் இந்தியா திரும்புவார். மோடி இந்தியா திரும்பியதும் புதிய கவர்னர்கள் நியமனம் குறித்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பிப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்தியில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றபிறகு முந்தைய காங்கிரசால் நியமிக்கப்பட்ட உத்தரபிரதேச கவர்னர் பி.எல்.ஜோஷி, மேற்கு வங்காள கவர்னர் எம்.கே.நாராயணன், சத்தீஷ்கர் கவர்னர் சேகர்தத், நாகலாந்து கவர்னர் அஸ்வினிகுமார், கோவா கவர்னர் பி.வி. வாஞ்சூ ஆகிய 5 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

கர்நாடகா கவர்னர் எச்.ஆர்.பரத்வாஜ், திரிபுரா கவர்னர் தேவானந்த் கொனவர் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கட்டாரியா சமீபத்தில் மத்திய அரசால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். குஜராத் கவர்னர் கமலாபெனிவால் மிசோரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மிசோரம் கவர்னர் வக்கோம் புரு ஷோத்தமன் நாகலாந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

மத்திய அரசு நெருக்கடி கொடுத்த பின்னரும், மகாராஷ்டிரா கவர்னர் சங்கரநாராயணன், கேரள கவர்னர் ஷீலா தீட்சித், அரியானா கவர்னர் ஜெகநாத் பகாடியா, பஞ்சாப் கவர்னர் சிவராஜ்பட்டீல் ஆகியோர் தங்களது கவர்னர் பதவிகளை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்கள்.

எனவே ஷீலாதீட்சித்தையும், சங்கரநாராயணனையும் விரைவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யலாம் என்று தெரிகிறது.