இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சி பெறும்:அருண் ஜேட்லி

இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சி பெறும்:அருண் ஜேட்லி

jaitley

இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி பெறும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சராக பதவியேற்ற அருண் ஜேட்லி தனது முதல் பட்ஜெட்டை கடந்த வியாழக்கிழமை (ஜூலை 10) அளித்தார்.

பொதுவாக வரவேற்பை பெற்ற மத்திய பட்ஜெட்டில் வரிகள் சீர்திருத்தம் குறித்துப் போதிய அறிவிப்புகள் இல்லை என்று நிதி ஆய்வு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியது:

இப்போதுள்ள நெருக்கடியான சூழலில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறேன். எல்லா முக்கிய முடிவுகளையும் முதல் நாளிலேயே எடுத்துவிட முடியாது.

பொருளாதார முன்னேற்றத்துக்கு மிக அவசியமான, ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எடுக்கப்படாத முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இன்சூரன்ஸ், வீட்டு வசதி, பாதுகாப்புத் துறை தொடர்பான முடிவுகள், வரி விதிப்பில் எளிமை உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் முக்கியமானவையாகும்.

தயாரிப்புத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவிப்புகள் உள்ளன. இந்த அரசு ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் இவை. சில துறைகளுக்கு சலுகைகள் தரப்பட வேண்டுமென்பதில் அரசு மிகத் தெளிவாக உள்ளது.

சாதாரண குடிமக்கள் மீது எவ்வளவுதான் சுமையை ஏற்றுவது? எனவே தனி நபர் வருமான வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்துள்ளேன். வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 2.5 லட்சமாக உயர்த்தியதும் சேமிப்புக்கான முதலீட்டு அளவை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சமாக அதிகரித்திருப்பதும் மாத வருவாய் பெறுவோருக்கு பெரும் பயனளிக்கக் கூடியவை.

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க இரண்டு வழிகள் உண்டு- செலவைக் குறைப்பது அல்லது வருவாயைப் பெருக்குவது. இவற்றில், வருவாயைப் பெருக்குவது சிறந்த முறை.

முந்தைய அரசு தீர்வு காண முடியாத விஷயங்களையும் விட்டுச் சென்றுள்ள பிரச்னைகளையும் எதிர்கொண்டு முடிவுகள் எடுத்துள்ளேன். இந்த பட்ஜெட்டானது பயணத்தின் ஆரம்பம்தான். இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.

நிதி நிலையை சீரமைக்க, மானியங்களில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். இதை முன்னிட்டு, செலவு நிர்வாக ஆணையம் ஒன்றை அறிவித்துள்ளேன். 66 ஆண்டுகளாக பழகிப் போன மானிய விவகாரங்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்றால், பட்ஜெட்டை விமர்சிக்கும் நிதி ஆய்வு நிறுவனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார். தொலைக்காட்சி சேனலொன்றுக்கு அளித்த மற்றொரு பேட்டியில் அவர் கூறியது:

இரண்டு விஷயங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ளன. ஒன்று, பருவ மழை. மற்றது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை.

பருவ மழை பொய்த்தால் அது நிச்சயம் பொருளாதாரத்தை பாதிக்கும். ஆனால், பருவ மழை அளவு குறைந்தாலும், போதிய அளவு உணவுப் பொருள்கள் கையிருப்புள்ளது. கச்சா எண்ணெயைப் பொருத்தவரை, சர்வதேச சந்தையில் அதன் விலை குறைந்து வருகிறது.

முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தினால், தயாரிப்புத் துறையை ஊக்கம் பெறுவதோடு வரி வருவாய் எழுச்சி பெறும்.

எனது பதவிக் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று ஜேட்லி கூறினார்.