மாஜி ராணுவ தளபதிகள் நாடு திரும்ப இலங்கை அரசு உத்தரவு

மாஜி ராணுவ தளபதிகள் நாடு திரும்ப இலங்கை அரசு உத்தரவு

sri-lanka-flag

ஜனவரி 23, இலங்கை தூதராக வெளி நாடுகளில் பணியாற்றும் மாஜி ராணுவ தளபதிகள் நாடு திரும்புவதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட போர் பற்றிய விசாரணைக்காக இவர்கள் திரும்ப அழைக்கப்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2009ல் நடைபெற்ற இறுதிகட்டப் போரின்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் பங்குபெற்ற ராணுவ தளபதிகளில் தமக்கு நெருக்கமானவர்களை, அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, வெளிநாடுகளுக்கான இலங்கை தூதராக நியமித்தார்.

இதன்படி, போரில் பங்குபெற்ற இலங்கை ராணுவ தளபதி சாந்தகொட்டகொட, கடற்படை தளபதிகள் அட்மிரல் வசந்தகரன்னகொட, அட்மிரல் திஸார சமரசிங்கே, மேஜர் ஜெனரல் கிருஷாந்த சில்வா, விமானப்படை தளபதி ஏர்மார்ஷல் ஜயலத் வீரக்கொடி, ஏர்மார்ஷல் டொனால்ட் பெரேரா உட்பட 12 பேர் ஜப்பான், பாகிஸ்தான், மலேசியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையின் தூதர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இறுதிகட்ட போரின்போது பங்கேற்றவர்கள். இறுதிகட்ட போரின் போது நடந்தவை குறித்து இவர்களிடம் விசாரிக்கப்பட உள்ளது. அதற்காக நாடு திரும்பும்படி இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.