என் தமிழ்

இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

நியூடெல்லி, 07 மார்ச் 2026 : நியூடெல்லி – ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஹுருன் அறிக்கையின் படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 9 சதவீதம் உயர்ந்து ரூ.9.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவை மட்டுமல்லாமல், ஆசியாவிலேயே அதிக செல்வம் கொண்டவராகவும் முகேஷ் அம்பானி தொடர்ந்து உள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் தற்போது 17-வது இடத்தில் உள்ளார்.

இந்திய பட்டியலில், ரூ.7.5 லட்சம் கோடி நிகர சொத்து மதிப்புடன் கவுதம் அதானி குடும்பம் 2-வது இடத்தையும், ரூ.3.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எச்.சி.எல் டெக் நிறுவனத் தலைவர் ரோஷ்னி நாடார் குடும்பம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். முதல் 10 பில்லியனர்களில் இடம்பெற்ற ஒரே பெண் ரோஷ்னி நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் சைரஸ் பூனவல்லா (ரூ.3 லட்சம் கோடி) 4-வது இடத்திலும், ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா (ரூ.2.5 லட்சம் கோடி) 5-வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் சன் பார்மா நிறுவனத்தின் திலீப் சங்க்வி, விப்ரோ நிறுவனத்துடன் தொடர்புடைய அசிம் பிரேம்ஜி மற்றும் நீரஜ் பஜாஜ் குடும்பம், அசோக் ஹிந்துஜா குடும்பம் மற்றும் டி மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி ஆகியோர் முறையே 6 முதல் 10-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவில் இந்த ஆண்டு மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டின் பட்டியலை ஒப்பிடுகையில் 24 பேர் அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. 1,110 பில்லியனர்களுடன் சீனா முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், அமெரிக்கா அடுத்த இடத்தில் உள்ளது. உலகளவில் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டியுள்ளதாக ஹுருன் அறிக்கை குறிப்பிடுகிறது.

Scroll to Top