இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்: இங்கிலாந்து எச்சரிக்கை

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்: இங்கிலாந்து எச்சரிக்கை

isis

ஜனவரி 20, தீவிரவாதத்தை தடுப்பது குறித்த இந்திய-இங்கிலாந்து கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம், லண்டனில் நடைபெற்றது. அதில், இந்திய அதிகாரிகளும், இங்கிலாந்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதில், இங்கிலாந்தில், பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பான லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பதிலுக்கு இங்கிலாந்து அதிகாரிகள், இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக கூறினர். அந்த தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அவர்கள் வற்புறுத்தினர்.

இந்த ஆலோசனையின்போது, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ‘நல்ல தீவிரவாதிகள்’, ‘கெட்ட தீவிரவாதிகள்’ என்று பாகுபடுத்தி பார்க்க வேண்டாம் என்று பாகிஸ்தானை நிர்ப்பந்திக்குமாறு இங்கிலாந்து அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் ஆகிவிட்டதாகவும், இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்குமாறும் வற்புறுத்தினர்.

இங்கிலாந்தில், 7 லட்சம் சீக்கியர்களும், 10 லட்சம் பாகிஸ்தானியர்களும் வசித்து வருகிறார்கள். ஓட்டு வங்கிக்காக, சீக்கிய அடிப்படைவாதிகளையும், இந்தியாவுக்கு விரோதமான பாகிஸ்தானியர்களையும் இங்கிலாந்து மென்மையாக அணுகி வருகிறது.

இதை சுட்டிக்காட்டிய இந்திய அதிகாரிகள், இந்தியாவில் சீக்கிய தீவிரவாதம் அழிந்து விட்டதாகவும், ஆனால் இங்கிலாந்தில் நீடித்து வருவதாகவும் கூறினர். சீக்கிய தீவிரவாதத்துக்கு ஆதரவாக, இங்கிலாந்தில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு, மூன்று டெலிவிஷன் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அதிகாரிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.