மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்:பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து என கருத்து

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்:பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து என கருத்து

bug

புதுடில்லி:”சாக இருந்த இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து போல், மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மேலும் பல தரப்பினரும், பட்ஜெட்டை பாராட்டியுள்ளனர். எனினும், வழக்கம் போல், எதிர்க்கட்சியினர் குறை சொல்லவும் தயங்கவில்லை.
பார்லிமென்டில் நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:சமுதாயத்தின் நலிவடைந்த ஏழை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில், பட்ஜெட் அமைந்துள்ளது. சோதனையான காலகட்டத்தில் நாங்கள் பொறுப்பேற்ற நிலையிலும், ஏழைகள், நடுத்தர மக்கள், புதிய நடுத்தர மக்கள், நடுத்தரத்திற்கு மேல் உள்ள மக்கள் என, அனைத்து தரப்பினருக்கும், எங்களால் எவ்வளவு உதவிகளை செய்ய முடியுமோ, அதை செய்யப் போவதற்கான அறிவிப்பாக பட்ஜெட் அமைந்துள்ளது.’நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வோம்’ என்ற எங்கள் குறிக்கோளில் சிறிதும் தவறாமல், சாகும் தருவாயில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றும் சஞ்சீவினி மருந்தாகவும், நாட்டின் கடைசி மனிதனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் சூரிய உதயமாகவும் இது அமைந்துள்ளது.நாட்டின், 125 கோடி மக்களின் ஆதரவுடன், நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இந்த பட்ஜெட் உள்ளது. திறமையான, தகவல் தொழில்நுட்ப பலம் பொருந்திய இந்தியா உருவாக, பட்ஜெட் வழிவகை செய்கிறது.மக்கள் சக்தியுடன், மக்கள் பங்களிப்பும் இணைய பட்ஜெட் ஊக்கமளிக்கும். விலைவாசி உயர்வால் அவதிப்படும் பெண்களின் துயரைத் துடைக்கும் வகையிலும், பெண்களுக்கும், பெண் குழந்தைகள் கல்விக்கும் ஊக்கமளிக்கும் வகையிலும் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.மத்தியில் பொறுப்பேற்றது முதல், நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை, ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் போக்கியுள்ளன.விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; விவசாயிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ஒரு துளி; ஒரு பயிர்’ என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளோம்.ராணுவம், கங்கையை தூய்மைப்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மத்திய அமைச்சர்கள் ஜெட்லிக்கு பாராட்டு:
உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்: அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பட்ஜெட் என, எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். உண்மையான பட்ஜெட் இது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்களுக்கு சாதகமான பட்ஜெட் இது. இந்த நாட்டை எப்படி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உள்ளோம் என்பதை, இதில் விளக்கியுள்ளார் அருண் ஜெட்லி.
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், வெங்கையா நாயுடு: இந்த நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் ஆரோக்கியம், வளமையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட் உள்ளது. உற்பத்தித்துறை, விவசாயம், சிறு, நடுத்தர தொழில்துறை மேம்பாடு அடையும்.
தொழில்துறை வரவேற்பு:
”பட்ஜெட்டில், வளர்ச்சிக்கான பாதை தென்படுகிறது; அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஸ்திரமான வர்த்தக சூழலுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு அதிக முதலீடு கிடைக்கும்; அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி கிடைக்கும்,” என, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர், அஜய் ஸ்ரீராம் கூறினார்.
”புதிய வரிகள் அதிகம் இல்லாமல், வரிப்பளு அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான், எங்கள் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அது, பட்ஜெட்டில் கிடைத்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஆதரவான, தொழில்துறை வளர்ச்சிக்கான பட்ஜெட் இது,” என, ‘பிக்கி’ எனப்படும், இந்திய தொழில், வர்த்தக சங்கத்தின் தலைவர், சித்தார்த் பிர்லா கூறினார்.
”பணவீக்கத்தை அழித்து, நிதிப் பற்றாக்குறையை சரி செய்து, வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடுநிலையை அடைவதற்கு பட்ஜெட் வழிகண்டுள்ளது; இதை வரவேற்கிறோம்,” என, ‘அசோசேம்’ தலைவர், ரானா கபூர் தெரிவித்துள்ளார்.
உ.பி., – பா.ஜ., மகிழ்ச்சி:
இந்த பட்ஜெட், உ.பி.,க்கு சாதகமாக அமைந்துள்ளதுடன், ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. எனினும், உ.பி.,யின் வளர்ச்சிக்கு இது, வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கங்கை நதிக்கரைகளை மேம்படுத்த, கங்கையை நதியை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், உ.பி.,யின், ‘சர்தோசி’ மற்றும், ‘சிகன்காரி’ கைவேலைப்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. லக்னோவில் மெட்ரோ ரயில் திட்டம், மதரசா நவீனமயத்துக்கு, 100 கோடி ரூபாய் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.அது போல், குஜராத், ராஜஸ்தான் மாநில, பா.ஜ.,வினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநில ஆளும் கட்சியான சிரோன்மணி அகாலி தளம், பட்ஜெட்டில், பஞ்சாபிற்கு சிறப்பு திட்டங்கள் இல்லைஎன்றாலும், திருப்திகரமான பட்ஜெட் என தெரிவித்துள்ளது.
தொழிலதிபர்களுக்கு ஆதரவானது: காங்கிரஸ் கொதிப்பு: பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், வருமான வரி விலக்கு உச்சவரம்பில், 50 ஆயிரம் மட்டும் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது; இது போதாது. சாமானிய மக்களுக்கும், ஏழைகளுக்கும் இந்த பட்ஜெட் ஒன்றும் சொல்லவில்லை. தொழிலதிபர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தான் வரிச்சலுகைகளை அறிவித்துள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே,லோக்சபா முன்னவர், காங்.,
இது, சராசரியான பட்ஜெட். பொருளாதாரம் நலிவடைந்துள்ள நேரத்தில்,நாட்டை எப்படி வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வது என்பதற்கான அறிவிப்பு இதில் இல்லை. நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக அவை எதுவும் அவர் உரையில் இல்லை. பொருளாதார சீரமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதும் விளக்கப்படவில்லை.
-வீரப்ப மொய்லி, முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
இந்த பட்ஜெட், சாதாரண மக்களுக்கான பட்ஜெட் இல்லை.
-கேப்டன் அம்ரிந்தர் சிங், காங்., – எம்.பி.,
நம்பிக்கை தரும் பட்ஜெட் இந்தியர் அனைவரின் விருப்பத்தையும் நிறைவு செய்யும் வகையிலும், அவர்களின் வலியை குறைக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது. பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தின் அனைத்து தரப்பினரின் விருப்பத்தை நடுநிலையுடன் பூர்த்தி செய்கிறது. ‘ஒரே பாரதம்; பாதுகாப்பான பாரதம்’ என்ற கொள்கையை, பட்ஜெட் வெளிப்படுத்துகிறது.
அமித் ஷா,பா.ஜ., தலைவர்
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் முதலீட்டாளர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் பட்ஜெட் உள்ளது. இந்த அறிவிப்புகளால், பொருளாதார வளர்ச்சி உறுதியாக கிடைக்கும். அதே நேரத்தில், நிறைவான வரிச்சலுகைகளும் இடம்பெற்றுள்ளன.பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதம் வரை கூட இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். தொழில் துறைக்கும், தொழிலதிபர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அது போல், வங்கித்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள உத்வேகம், அத்துறையை மேலும் வளப்படுத்தும்.
அரவிந்த் மாயாராம்,நிதித்துறை செயலர்
நம்பிக்கையான, மக்கள் சார்ந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை உறுதிபடுத்தும் திட்டங்களில் கவனம்செலுத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் இந்த பட்ஜெட், மக்களுக்குநன்மையளிக்கும்.
அனுராக் தாகூர்,பா.ஜ., – எம்.பி.,